You are currently viewing ‘போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு யோசனை முன்வைப்பு’

‘போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு யோசனை முன்வைப்பு’

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம், அதன் பின்னரான அனைத்து செயற்பாடுகளிலும் தொழிற்சங்கத் தலைவர்கள், சகல பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப்பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் எவ்வித அரசியல் கட்சிகளையோ, எந்த தீவிரவாத இயக்கத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களை நாட்டுத் தலைவர்- பாசிஸ்டுகள், குழப்பவாதிகள், ஆட்சிக் கவிழ்ப்பாளர்கள் என பட்டம் சூட்டினார். அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்ற பலர் தற்போது தேடித்தேடி கைது செய்யப்படுகின்றமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை எந்த நாட்டிலும் கைது செய்கின்ற வரலாறு இல்லை. அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடத்திற்கு மேல் இடம்பெற்றது. இறுதியில் இந்திய அரசாங்கம் அடிபணிந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றது. இதற்காக எந்த விவசாயியையும் இந்திய அரசாங்கம் கைது செய்வதற்கு முயற்சிக்கவில்லை.

காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணமாகவே ரணில் ஜனாதிபதியானார். எனவே காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றியுடையவராக ரணில் இருக்க வேண்டும். ஆனால் அவர்களை பழிவாங்குவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுவதை முழுநாடும் உணருகிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமானதல்ல.

உண்மையில் காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு பகிரங்க மன்னிப்பை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முன்வர வேண்டும்- எனவும் ஏ.எல்.எம்.முக்தார் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply