You are currently viewing நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்ட பின்னர் நடப்பது என்ன?

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்ட பின்னர் நடப்பது என்ன?

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 1978 முதல் 2022 ஜுலை 28 வரை 31 தடவைகள், நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

1978 செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது நாடாளுமன்றம்,  1988 டிசம்பர் 20 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஏழு தடவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜயவர்தன செயற்பட்டார். 

1989 மார்ச் 09 ஆம்  திகதி ஆரம்பமான இரண்டாவது நாடாளுமன்றம் 1994 ஜுன் 24 ஆம்  திகதி கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது. அதாவது ஐந்து தடவைகள் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.  இக்காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவும், அவரின் மறைவின் பின்னர் டிபி விஜேதுங்கவும் ஜனாதிபதியாக செயற்பட்டனர். 

1994 ஓகஸ்ட் 25 ஆந் திகதி ஆரம்பமான மூன்றாவது நாடாளுமன்றம்  2000 ஆகஸ்ட் 18 ஆந் திகதி கலைக்கப்படும் வரையில் மூன்று தடவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (ஜனாதிபதி – சந்திரிக்கா)

2000 ஒக்டோபர் 8 ஆம் திகதி ஆரம்பமான நான்காவது நாடாளுமன்றம்  2001 ஒக்டோபர் 10 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது. (ஜனாதிபதி – சந்திரிக்கா)

2001 டிசம்பர் 19 ஆந் திகதி ஆரம்பமான ஐந்தாவது நாடாளுமன்றம்  2004 பெப்ரவரி 09 ஆம் திகதி  கலைக்கப்படும் வரையில் இரண்டு தடவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. (ஜனாதிபதி – சந்திரிக்கா)

2004 ஏப்ரல் 22 ஆந் திகதி ஆரம்பமான ஆறாவது நாடாளுமன்றம் 2010 பெப்ரவரி 09 ஆம் திகதி  கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது. ( 2005 முதல் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி)

2010 ஏப்ரல் 22 ஆம் திகதி ஆரம்பமான ஏழாவது நாடாளுமன்றம் 2015 ஜுன் 26 ஆந் திகதி  கலைக்கப்படும் வரையில் ஒரு தடவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச)

2015 செம்டம்பர் 01 ஆம் திகதி ஆரம்பமான எட்டாவது நாடாளுமன்றம் 2020 மார்ச் 02 ஆம் திகதி கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது. (ஜனாதிபதி  மைத்திரி)

2020.08.20 ஆந் திகதி ஆரம்பமான ஒன்பதாவது நாடாளுமன்றம் இற்றை வரை இரு தடவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.  (ஜனாதிபதி கோட்டா – ரணில்) 

நாடாளுமன்ற குழுக்கள்

நாடாளுமன்ற 114 ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், தெரிவுக் குழு நியமிக்கப்பட வேண்டியிருப்பதுடன் அதன் காரணமாக, நாடாளுமன்றம் இடைநிறுத்தம் அல்லது கூட்டத்தொடர் ஒத்திவைப்பு காலப்பகுதியின் போது விசேட நோக்கங்களுக்கான பின்வரும் அனைத்துக் குழுக்களும் செயற்படுவது நிறுத்தப்படுவதுடன் முறையே 124(5),111(2) மற்றும் 109 ஆகிய இலக்கங்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப உயர்பதவிகள் பற்றிய குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் தெரி குழுக்கள் தவிர்ந்த அனைத்துக் குழுக்களும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் ஆரம்பத்திலும் மீளமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

அ. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு;

ஆ. நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு;

இ. சபைக் குழு;

ஈ. ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு;

உ. சட்டவாக்க நிலையியற் குழு;

ஊ. அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்;

எ. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு;

ஏ. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு;

ஐ. அரசாங்க நிதி பற்றிய குழு;

ஒ. பொது மனுக் குழு; மற்றும்

ஓ. பின்வரிசைக் குழு.

 தவிசாளர் குழாம்

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் பிரதிச் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் சமுகமளித்திராத சந்தர்ப்பத்தில், குழுக்களின் பிரதிச் தவிசாளர் வேண்டிக்கொள்ளும்போது குழுக்களின் தற்காலிக தலைமையாக செயற்படுவதற்காக நான்கு உறுப்பினர்களுக்கு குறையாத தவிசாளர் குழாம் ஒன்றை சபாநாயகர் பெயர்குறித்து நியமிக்கவேண்டியுள்ளது.

புதிய கூட்டத் தொடரின் ஆரம்பம்

ஒரு கூட்டத்தொடர் ஒத்திவைப்பின் முடிவில் ஒரு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிப்பதுடன் அது ஜனாதிபதியினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் ஆரம்பத்திலும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கும் அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் பந்தி (2) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளுக்கு தலைமைவகிப்பதற்கும் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு தத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply