You are currently viewing அவசரகால சட்டம் நிறைவேற்றம் – 120 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

அவசரகால சட்டம் நிறைவேற்றம் – 120 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று  57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில்  ஜனாதிபதியாக செயற்பட்டவேளை, கடந்த ஜுலை 17 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தினார்.  

அவசரகால நிலைமைப் பிரகடனப்படுத்தப்பட்டு,  14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் அது இரத்தாகிவிடும். எனவே, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த  நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.மாலை 5.25 மணிவரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.   

அதன்பின்னர் அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான பிரேரணைமீது எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்பை கோரினார். இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. டலஸ் அணியும் எதிராகவே வாக்களித்தது. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், அரச பங்காளிக்கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளடங்கலான சுயாதீன அணிகளும் ஆதரித்து வாக்களித்தன. இ.தொ.கா. எம்.பிக்கள் இருவரும் ஆதரித்து வாக்களித்தனர். 

Leave a Reply