நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரே இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலில் இருந்து ஒதுங்கினார். தமது கட்சியின் ஆதரவை டலஸ் அழகப்பெருமவுக்கு வெளிப்படுத்தினார். டலஸின் பெயரை அவரே முன்மொழிந்தார். இதனை மொட்டு கட்சியின் தவிசாளர் பீரிஸ் வழிமொழிந்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அதனை மனுச நாணயக்கார வழிமொழிந்தார்.
அநுரவின் பெயர் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டது.
113 கட்டாயம் தேவையா?
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் – வாக்களிப்புமூலம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் ஊடாக 29 பேரும் என மொத்தம் 225 பேர் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
இதன்படி நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பானமை – அறுதிப்பெரும்பான்மையாக 113 ஆசனங்கள் கருதப்படுகின்றது. விசேட பெரும்பான்மை அல்லது மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக 150 ஆசனங்கள் கருதப்படும்.
எனவே, நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் கட்டாயம் ‘113’ வாக்குகளைப் பெற வேண்டும் என கருதுபவர்களும் இருக்கின்றனர். அது தொடர்பான கருத்தாடல்களும் சமூகவலைத்தளங்களில் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். மேலும் சில சட்ட நிபுணர்களுடன் நடைமுறையை விளக்கியுள்ளனர். அவற்றின் சுருக்கம் வருமாறு,
” ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தினத்தில் 10 எம்.பிக்கள் சபைக்கு வரவில்லை எனவும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 15 வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன எனவும் வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் 200 வாக்குகளே செல்லுப்படியான வாக்குகளாக அமையும். அதில் 50 வீதத்துக்கு மேல் பெறுபவர் அதாவது – 101 வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.
