” இலங்கையின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு சோஷலிசமே'” என்று முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
” ஜனநாயகம் மக்களின் இறையாண்மை சக்தியாலேயே வலுவாகின்றது. அரசியலமைப்பு சட்டங்கள் தேவவசனங்களால் உருவான ஒன்றல்ல. அது சமூகத்தின் உருவாக்கமாகும். மக்களின் நன்மை கருதி அதனை மாற்ற முடியும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஆட்சியில் தங்கியிருப்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்பை உருவாக்கி உள்ளார்கள். அவற்றை சட்டமாகவும் மாற்றியுள்ளார்கள். அதனால் அதைவிட விரிவான அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதற்காக மக்களின் தலையீடு நாட்டின் சட்டங்களாக மாற வேண்டும். அது முற்றிலும் ஜனநாயக ரீதியாக காணப்படுவதோடு அது நாட்டின் சட்டமாகவும் மாற வேண்டும்.” – எனவும் குமார் குணரத்னம் வலியுறுத்தினார்.
” முன்னிலை சோசலிச கட்சியின் நீண்ட கால இலக்கு இலங்கையில் சோஷலிசத்தை உருவாக்குவதாகும். நீண்ட காலமாக நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு சோஷலிச சமூக முறையிலேயே காணப்படுகின்றது. இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு சோஷலிசமே. மக்களை இணைத்து மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை உருவாகும் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
மக்களுக்கான அரசியலமைப்பு ஒன்றின் தேவையை இன்று நாம் உணர்கின்றோம். இறுதி வெற்றி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு உருவாகும் தற்காலிக அரசுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு மிக விரைவில் சீர்திருத்தங்களை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பினால் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் கருத்து எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஜனநாயக முறையில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
