இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம், ஜுலை 14 ஆம் திகதி (நேற்று) தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான – அரசியலமைப்பு சார்ந்த செயன்முறை தற்போதிலிருந்து ஆரம்பமாகின்றது எனவும், அந்த நடவடிக்கை நிறைவுபெறும்வரை ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரம், கடமை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக – அரசமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுவார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 7 நாட்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறிய சபாநாயகர், இதற்கமைய ஜுலை 16 ஆம் திகதி சனிக்கிழமை (நாளை) நாடாளுமன்றம் கூடும் எனவும், கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.
தெற்காசியாவில் பழமையான ஜனநாயக நாடாக இலங்கை பெருமைபடும் நிலையில், அமைதியான சூழலில் ஜனநாயக முறைப்படி – வெளிப்படை தன்மையுடன் இதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடிக்க ஒத்துழைப்பு நல்குமாறு கட்சி தலைவர்களிடமும், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொது மக்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கும், மனசாட்சியின் பிரகாரம் செயற்படுவதற்குமான அமைதியான சூழ்நிலை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் இதற்கான எற்பாடுகளை செய்யவே தான் விரும்புகிறார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார். இது இலங்கைக்கு மட்டுமல்ல உலக அரசியல் வரலாற்றிலும், வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவமாக அமையும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
