You are currently viewing ஆவணங்கள் பதிவு உட்பட முக்கியமான 6 சட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

ஆவணங்கள் பதிவு உட்பட முக்கியமான 6 சட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (27) மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.  

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான சில அமைச்சரவை பத்திரங்களுக்கு இதன்போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக அமுலில் உள்ள சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கும், புதிய சட்டங்களை இயற்றுவதற்குமான யோசனைகளே அவை. 

நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்கள் வருமாறு, 


1.    சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் சிறுவர் எனப் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமவாயத்திற்கு அமைய குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2020 செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்    சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

2.மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

நொத்தாரிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் மரணசாதன கட்டளைச் சட்டங்களுக்காக மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கு ஒருசில விளைவாய்ந்த தன்மையுடைய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

3.அற்றோனித்தத்துவ உரிமப்பத்திர கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

போலியாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் அற்றோனித்தத்துவ உரிமப்பத்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக அற்றோனித்தத்துவ உரிமப்பத்திர கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் நீதிமன்றத்தை அவமதித்தல் குற்றம், பொருள்கோடல் செய்யப்படாமையால் அவ்வாறான வழக்குகளை விசாரணை செய்வதற்கும் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கும் தெளிவானதும் ஒரே விதமானதுமான நடபடிமுறையொன்று தற்போது பின்பற்றப்படுவதில்லை. 

அதனால் நீதி வழங்கும் செயன்முறையில் தலையிடும் மட்டுப்பாடுகள் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் கீழ் காணப்படும் மட்டுப்பாடுகள் தொடர்பாகப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. 

அதேபோல், நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக அண்மைக்காலத்தில் மோசமாக விமர்சனத்திற்குள்ளாகிய வழக்குகள் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளும் போது அதுதொடர்பான சட்டத்தை மீண்டும் கவனத்திலெடுத்தல் உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருத்தமான சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அதுபற்றிய விடயங்களை ஆராய்ந்து இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அடிப்படைச் சட்டமூலத்திற்கமைய சட்டமொன்றை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்   சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்தல்

காணி மோசடிகள் தொடர்பாக சட்ட விரோத செயற்பாடுகளைத் தடுக்;கும் நோக்கில் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நொத்தாரிஸ் ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்தின் பிரகாரம், பதிவாளர் நாயகத்தின் கருத்துக்களையும் கேட்டறிந்து சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

காணிகள் தொடர்பான மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.