You are currently viewing தேர்தல் முறைமையில் மாற்றம் – தெரிவுக்குழு பரிந்துரை

தேர்தல் முறைமையில் மாற்றம் – தெரிவுக்குழு பரிந்துரை

நாடாளுமன்ற தேர்தலுக்கு கலப்பு முறையொன்றை முன்னெடுக்க 03 மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும், செலவு குறைந்த தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவின் அறிக்கையை நேற்று சபையில் சமர்ப்பித்த அவர்மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் 160 பேர் வரை தெரிவுக்குழுவுக்கு தமது யோசனைகளை அனுப்பியிருந்தனர். சிவில் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு வந்து தமது யோசனைகளை முன்வைத்தனர்.

கலப்பு தேர்தல் முறையொன்றை தான் பலரும் பிரேரித்துள்ளனர். பரிந்துரைகளில் உள்ளூராட்சி தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பரிந்துரை பிரதிநிதி தெரிவை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு மேலதிகமாக இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 சில சட்டதிட்டங்கள் காரணமாக உள்ளூராட்சி தேர்தல் தடைப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறும் அல்லது பழைய முறைப்படி தேர்தல் நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்றவேண்டிய பொறுப்புக்கள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள விடயங்களின் பிரகாரம் அவை செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதும் அவற்றின் செயற்பாடு தொடர்பில் குறைபாடு காணப்படுகிறது. எனவே அவற்றை தேர்தல்களின் அடிப்படையில் அங்கீகரிப்பது குறித்தும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்களில் பிரசார அவகாசம் வழங்குகையில் அநேக வேட்பாளர்களுக்கு குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவை தொடர்பில் நியயமாக செயற்பட வேண்டுமெனவும் தேர்தல் சட்டங்களை பின்பற்றுதல் மற்றும் தேர்தல் செலவுகளை குறைத்தல் என்பன குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில் தேர்தல்களுக்கு செலவிடப்படுகிறது.

அதனால் மோசடி நிறைந்ததாக தேர்தல் காணப்படுவதோடு தேர்தல் செலவுகளை முறையாக வெளியிடும் வகையில் சட்டம் இன்மை குறித்தும் குறிப்பிப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் தெளிவான சட்டங்கள் கொண்டுவருமாறும் கோரப்பட்டுள்ளது.

பிரசாரம் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்றோருக்கு தனியான வாக்களிப்பு நிலையம் உருவாக்குமாறும் இலத்திரனியல் தேர்தல் முறையை அறிமுகம் செய்யுமாறும் தெரிவுக்குழு பரிந்துரைக்கிறது. இதன் ஊடாக தேர்தல் முடிவுகளை துரிதமாக அறிவிக்க முடியும். வேட்புமனு தாக்கல் முறையை இலகுபடுத்தவும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதனை மீளாய்வு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply