அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
” 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே, முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்து இறுதி வரைவு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்ததன் காரணமாக இந்த செயல்முறை தாமதித்துள்ளது.” – எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
” புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு அமைப்பு தொடர்பில் முழுமையான திட்டத்தை முன்வைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர் தனது அறிக்கையை திங்கள்கிழமை கையளித்தார்.
எனவே, மீண்டும் ஒருமுறை உடனடியாக நாடாளுமன்றத்திற்குச் சென்று 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்து புதிய நாடாளுமன்றக் குழு அமைப்பை ஏற்படுத்துவதற்கு உடன்படுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 2022 இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால பாதீடு முன்வைக்கப்படும். அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். ” – எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டார்.
