அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தில் 08 பிரதான விடயங்கள் திருத்தப்படுகின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டுமெனவும் முன்மொழியப்பட்டுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிக்கவும் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சர்வஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய திருத்தங்களே 21ஆவது சட்டமூலத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும் எதிர்க்கட்சிகள் அதற்கு பதிலளிக்காத நிலையிலேயே ஜனாதிபதிக்கு தேவையான ஒருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்க கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு முன்னர், ஏப்ரல் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றை சமர்ப்பித்தேன். இடைக்கால சர்வகட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்த போது எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டோம். 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை காரணமாக அதனை எதிர்த்தோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் 07 கோரிக்கைகள் தொடர்பில் உடன்பாடு எட்ட முடிந்தது. ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி சலுகை நிறுத்தப்பட்டதால் சிறிது காலத்துக்கு நிம்மதியை இழந்தோம். வெளிநாட்டு அமைப்புகளுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று ஜனநாயக ஆட்சியை நிறுவி எமது உரிமைகளை மீளப் பெறுவோம் என உறுதியளித்தோம். 20ஆவது திருத்தச்சட்டத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாம் கண்டோம்.
19 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைவாக 21ஆவது திருத்தச் சட்டம் திருத்தச் சட்டமூலமாக கொண்டுவரப்படுகிறது. சர்வஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய சட்டமூலத்தில் திருத்தமாக 21வது சட்டமூலத்தை எம்மால் முன்வைக்க முடிந்துள்ளது.
08 விடயங்கள் தொடர்பில் இதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்படுதல் அல்லது அந்த அதிகாரம் பிரதமர் உட்பட பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்கள் மாற்றப்படும்.
சட்டத்தின் 02, 03 மற்றும் 04 ஆகிய சட்டங்களின் பிரகாரம் அனைத்து விடயங்களிலும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டத்தின் 14ஆவது பிரிவில் அரசியலமைப்பு சபை ஒன்றை பாராளுமன்றத்தில் நிறுவ வேண்டும் என்று முன்மொழிகிறது. அதற்கு ஜனாதிபதியின் பிரதிநிதிகள் யாரும் இருக்கக்கூடாது.
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் நிறுவப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். அதில் ஜனாதிபதி பங்கேற்கக் கூடாதெனவும், பிரதமரின் பங்கேற்பே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
