நாடாளுமன்ற அமர்வை ஒரு வாரத்துக்கு புறக்கணிப்பபோவதாக அறிவித்து பிரதான எதிர்க்கட்சிகள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உளளிட்டவையே இவ்வாறு வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமயில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
” தற்போதைய அரசால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுள்ளது. நாடாளுமன்றம் கூடியும் பயன் இல்லை. வரிசை யுகமும் முடியவில்லை. எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும். இதற்கு காலக்கெடு விதிக்கின்றோம். அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஒரு வாரத்துக்கு சபை அமர்வை புறக்கணிக்கின்றோம்.” – என்று அறிவித்தார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க,
” 52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிபோலவே, பிரதமர் நியமனம் இடம்பெற்றுள்ளது.” – என சுட்டிக்காட்டினார்.
சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை தயாசிறி ஜயசேகர அறிவித்தார். அதன்பின்னர் மேற்படி மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் சபையில் இருந்து வெளியேறினர்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநடப்பு செய்யவில்லை.
