You are currently viewing ’13’ முழுமையாக அமுலாகும் உறுதிமொழி ’21’ இல் உள்ளடக்கப்பட வேண்டும்!

’13’ முழுமையாக அமுலாகும் உறுதிமொழி ’21’ இல் உள்ளடக்கப்பட வேண்டும்!

21ஆவது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13 ஆவது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21அவது திருத்த சட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

 மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் 21ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுவதுடன் அந்த சட்ட திருத்தத்தின் குழுவில் தாங்களும் உள்ளதாக பெருமையாக சொல்லிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணத்திற்கு காணி, நிதி அதிகாரங்கள் வழங்காமல் எந்த திருத்த சட்ட மூலத்தினையும் கொண்டுவருவதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

என்னைப்பொறுத்த வரையில் 21ஆவது திருத்த சட்டம் வரும் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த திருத்த சட்டங்கள் மூலம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் இருக்கின்றது என்பதை நாங்கள் முதலில் சிந்திக்கவேண்டும்.

இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட எட்டு திருத்த சட்டங்களுக்கு முன்னர் வந்த 13ஆவது திருத்த சட்டம் கூட இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது.13ஆவது திருத்ததிற்குள் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது.

இந்த அரசாங்கம் அரசியலமைப்பினை மீறுகின்றது. 21ஆவது திருத்த சட்டத்தினை நாங்கள் ஆதரிக்கவேண்டும் என்கின்ற நிலைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராருக்குள்ளும் இருக்கின்றது. இந்த 21ஆவது திருத்த சட்டத்தினை வரையும்போது தாங்களும் அதில் முக்கிய பங்காற்றியதாககூட கூறியிருக்கின்றார்கள்.

இந்த 21ஆவது திருத்த சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தினை ஒழித்து அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கி அதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயக முறையினை கொண்டுவரவேண்டும் என்றார்.