“மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.” என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்கள் வாக்குரிமையை தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். அந்த கருவி ஊடாக உரியவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் அவ்வாறு வழங்கப்படவில்லை. அதனால்தான் 74 வருடங்களாக நாடு நாசமடைந்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், மக்களின் போராட்டத்தால் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டியநிலை ஏற்பட்டது.
மக்கள் அதிகாரம் உருவாகும் போது அரசாங்கங்கள் இருக்கும். ஆனாலும் அரசாங்கங்கள் தாங்கள் நினைத்ததை போன்று நடக்க முடியாது. மக்கள் அதிகாரத்துடன் பேசியே செயற்பட முடியும். தற்போதைய மக்கள் அதிகாரம் காணப்படுகிறது. ஆனால் அதுவொரு அமைப்பாக உருவாக வேண்டும்.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் அதிகாரத்துடன் பேசியே செயற்பட வேண்டும்
நிறைவேற்றதிகார முறை இல்லாமல் செய்யப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அது வெளியில் இருந்து பெறப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியபோதும் இதற்கு உடன்பட்டார்கள். நிறைவேற்று அதிகார முறையை இல்லாமல் செய்து தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்பட வேண்டும்.
இனவாதம் இன ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட்டாலே பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.” – என்றார்.
