” 21 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் போதிய பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இல்லையென்றால் தமிழ் தேசியக்கட்சிகள் அதனை ஆதரிக்கக் கூடாது. மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.”
இவ்வாறு அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” அரசியல் யாப்பிற்கான 21ஆவது திருத்தம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவினால் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அதிகாரங்களை அமைச்சரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள், அரசியல் அமைப்பு பேரவை என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குவதே திருத்தத்தின் நோக்கமாகும். இத்திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் 21 ஆவது திருத்தத்தை ஆரம்பமாகக் கொண்டு ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்படல் வேண்டும் என்றே வற்புறுத்துகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என அனைத்தும் இதில் அடக்கும்.
எனவே தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்பு என்ற வகையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினராகிய நாம் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் பின்வரும் இரு கோரிக்கைகளை 21 ஆவது திருத்தம் தொடர்பாக முன்வைக்கின்றோம். 1. 21 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் போதிய பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
குறைந்தபட்சம் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலாவது தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் இருத்தல் வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்காவிட்டால் 21ஆவது திருத்தத்தை தமிழ்த்தேசியக் கட்சிகள் ஆதரிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தப் பணியை மேற்கொள்ளாது ஆதரவு கொடுத்தால் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
