You are currently viewing நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. 2 நிபந்தனைகள்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. 2 நிபந்தனைகள்!

” மாகாண  சபைகள் சுயாட்சி கோருவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த  பின்னரே , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். 

அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உடன் நீக்கப்பட வேண்டும் என அடம் பிடித்தால், அது 21 ஐயும் தாமதப்படுத்திவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு, 

” அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் செல்வதை சிலர் விரும்பவில்லை. இங்கு நபர்கள் முக்கியம் அல்லர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கம். அந்த அடிப்படையில்தான் 21 ஐ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரிக்கின்றது. 

இதற்கிடையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். அதனை செய்வதாக இருந்தால்,  சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிவரும். இந்த முயற்சி 21 ஐயும் தாமதப்படுத்தும். எனவே, முதற்கட்டமாக 21 ஐ நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 1978 இல் அமுலுக்கு வந்தது.  அப்போது சுதந்திரக்கட்சி அதனை எதிர்த்தது. எனினும், 88 காலப்பகுதியில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டன. எனினும், ஆளுநர்கள் ஊடாக ஜனாதிபதி மாகாணங்களைக் கட்டுப்படுத்தி, ஒற்றையாட்சியை பாதுகாத்தார். 

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் இந்த ஆளுநரின் அதிகாரத்தை எவ்வாறு அமுல்படுத்துவது, ஒற்றையாட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

அடுத்ததாக விகிதாசார தேர்தல்  முறைமையின்கீழ் 89, 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலேயே கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் தலையீட்டுடன் எதிரணிகளின் ஒத்துழைப்பை பெற்றே,  ஆட்சி நிறுவப்பட்டுள்ளது. எனவே,  ஸ்தீரமான அரசு தொடர்பிலும் தீர்மானிக்கப்பட வேண்டும். 

இவ்விரண்டு ஏற்பாடுகளை செய்த பின்னரே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும்.” – என்றார்.  

Leave a Reply