You are currently viewing அரசமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை சமாந்தரமாக முன்னெடுக்க திட்டம்

அரசமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை சமாந்தரமாக முன்னெடுக்க திட்டம்

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.  

மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச உட்பட  மொட்டு கட்சியின் பல எம்.பிக்களும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் உணவு பஞ்சம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. 

அவ்வேளையில் 21 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார பிரச்சினை தீர வேண்டுமெனில், அரசியல் உறுதிப்பாடும் அவசியம். எனவே, இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எதிர்வரும் வியாழன் அன்று, மொட்டு கட்சி எம்.பிக்கள், நிதி அமைச்சருடன், 21 தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர். அதன்பின்னரே கட்சியின் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

Leave a Reply