” எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே, கூட்டு சமஷ்டியே தீர்வுக்கான வழியென்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
” இன அழிப்பு யுத்தத்தின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள்மீதுகூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலசந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
உணவு தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்பு யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. ” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.” எனவும் வலியுறுத்தினார்.
தமிழர்களிடமிருந்து தலைவர்களை தேடுங்கள், மாறாக முகவர்களை தேட வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு முகவர்களை தேடுவதால்தான் பிரச்சினைகள் தீராமல் உள்ளன. எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்.” – என்றும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.
