ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று ;முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பதவி விலகியதால், முதல் நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெற்றது.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது கட்சி எம்.பியான ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்மொழிந்தார். எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல அதனை வழிமொழிந்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற அஜித் ராஜபக்சவின் பெயரை, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முன்மொழிந்தார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன் மொழியப்பட்டதால், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சுயாதீன அணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
“ நாடாளுமன்றம்மீது மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் செயல் இது. எனவே, நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி, கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.” – என சுயாதீன அணிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பிரதமரின் நிலைப்பாடும் இதுவென சுட்டிக்காட்டினர். இதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
“ இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஏற்பாடு. அதனை நான் செய்ய போகின்றேன். ஆனால், இருவரில் ஒருவர் தாமாக விலகலாம்.” என சபாநாயகர் சுட்டிக்காட்டினர். இதற்கு வேட்பாளர்களை நிறுத்திய இரு தரப்புகளும் இணங்கவில்லை. வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் வகையிலேயே வாக்களிப்பு நடத்தப்படும் என விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன போன்றோர் அறிவித்தனர்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அஜித் ராஜபக்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும், ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைத்தன. 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.
