தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.” என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.
சமகால நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் எதுவுமே மாறப்போவது கிடையாது. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது. ஆனந்த சுதாகரன் மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நடந்த விடயங்களில் இருந்து இதனை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது தெற்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வடக்கு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை
தென்னிலங்கை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.
தென்னிலங்கையில் கோட்டா கோ கம, மைனா கோ கம என போராட்டத்தில் ஈடுபவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும். எமது உறவுகள் கையளிக்கப்பட்ட பின்னரே
காணாமலாக்கப்பட்டவர்கள் என்பதை தென்னிலங்கை போராட்டக்காரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும்.
தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாத வகையில் ஒரு சுய நிர்ணய உரிமையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
