இரண்டாவது தடவையாகப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தன் பதவியை மீளவும் ராஜினாமாச் செய்துள்ள நிலையில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போதும் முதல் விடயமாக நடைபெறும்.
அதை அடுத்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை விவாதத்துக்குஎடுப்பதற்கான நடவடிக்கை முன் னெடுக்கப்படும்.
இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஒன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ளது.
அதனை நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வடிவத்தில் எடுப்பதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிடும் பிரேரணையாக அதன் வாசகங்களை மாற்றினால் அதனைச் சபையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியும் என்று சபாநாயகர் ஏற்கனவே தம் முடிவை அறிவித்து இருக்கின்றார் என்பது தெரிந்ததே.
அதன்படி வாசகங்களை மாற்றி அதனை உடனடியாக நாடாளுமன்றில் வாதத்துக்கு எடுக்க எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. எனினும் இத்தகைய பிரேரணை ஏதும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து நாடாளுமன்ற அமர்வு நாள்கள் பூர்த்தியான பின்னரே அதனை சபையில் விவாதத்துக்கு எடுக்க முடியும் என்பது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதியாகும்.
ஆகவே, இப் பிரேரணையை 17 ஆம் திகதி சபையில் எடுப்பதாயின், அதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்று அதற்கு முன் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதை எதிரணி செய்வதற்கு அனுமதிக்க இன்றைய கூட்டத்தில் சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.
இதன்படி, 17ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலையில் நாடாளுமன்றம் கூடியதும் முதலில் பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து
நிலையியற் கட்டளைகளை இடை நிறுத்தும் பிரேரணை ஒன்றை எதிரணி
சமர்ப்பிக்கும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் நடவடிக்கை கள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நாடாளு மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
