You are currently viewing ‘வன்முறை சம்பவம்’ – பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி விசாரணைக்கு அழைப்பு

‘வன்முறை சம்பவம்’ – பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி விசாரணைக்கு அழைப்பு

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை பேணத் தவறியமைக்கான காரணம் குறித்து விளக்குவதற்காக இவ்விருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (10)  கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வமத  தலைவர்களுடன் நேற்றிரவு (09) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.  

அறவழி  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட கொலைவெறி தாக்குதலை,  வன்மையாகக் கண்டித்துள்ள சர்வமத தலைவர்கள், வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர் .

அத்துடன், நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் சர்வமத தலைவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

“ நாட்டில் தற்போது அரசாங்கமொன்று இல்லை. எனவே, நாடாளுமன்றத்தை உடன்கூட்டி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை தெரிவுசெய்யவும். 20 நீக்கப்பட வேண்டும். 15 பேருடன்தான் அமைச்சரவை அமையவேண்டும்.” எனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.  

இதன்போது, சர்வக்கட்சி தலைவர்களை தான் மே 10 ஆம் திகதி (இன்று) சந்திக்கவுள்ளதாகவும்,  இச்சந்திப்பின்போது புதிய அரசொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார் எனவும்  கலந்துரையாடலில் பங்கேற்ற சர்வ மத தலைவர்கள் தெரிவித்தனர். 

‘மைனாகோகம’, ‘கோட்டாகோகம’ அறவழி போராட்டக்காரர்கள்மீது ஆளுங்கட்சியின் நேற்று முற்பகல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்தன. 

அலரிமாளிகைக்கு வருகைதந்து, அதன் பிறகு போராட்டக்காரர்கள்மீது  கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க ஆதரவாளர்கள் உட்பட போராட்டக்காரர்கள்மீது, மக்கள் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் பயணித்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.  

நாடாளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்துள்ளனர். நிட்டம்புவையிலும், வீரகெட்டியவிலும்  துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின. காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுகின்றனர். 

அதேவேளை, ஆளுங்கட்சி மற்றும் சில எதிரணி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் அடித்து – நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.  மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது.   

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மொறட்டுவ மேயர், சனந் நிஷாந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சொந்தமான சில ஹோட்டல்களும் நொறுக்கப்பட்டுள்ளன.  வாகனங்களும் எரியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.  

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை உட்பட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நாடாளுமன்றத்தை 17 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவது தொடர்பிலும் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் முடிவொன்றுக்கு வருவார்கள்.  

நாட்டில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார், குற்றபுலனாய்வு பிரிவினர் ஆகியோர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.