ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்குவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு இன்று (09) கூடியது. கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதிக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை விவாதத்துக்கு எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவ்வேளையிலேயே இவ்விரு பிரேரணைகளையும் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்குவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சிறு திருத்தம் செய்யப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ என்பதற்கு பதிலாக, அவரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்பதுபோன்ற வசனமொன்று உள்ளடக்கப்படவுள்ளது.
பிரேரணைகள் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகம் அச்சிடப்படும் எம்.பிக்களுக்கு பகிரப்படும்.
அதன் பின்னர் 5 வேலை நாட்களுக்கு பிறகு விவாதம் நடத்தப்பட வேண்டும். விவாதம் நடத்துவதற்கான திகதியை சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவே தீர்மானிக்க வேண்டும். அந்தவகையில் நாளை மறுதினம் புதன்கிழமை கட்சி தலைவர்கள் கூட்டம் மீண்டும் இடம்பெறவுள்ளது.
இதன்போது எந்த பிரேரணையை முதலில் எடுப்பது என்பது சம்பந்தமாக தீர்மானிக்கப்படும். நாடாளுமன்றம் 17 ஆம் திகதி கூடவுள்ளது. அவ்வாரத்தில் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பிரதமர் பதவி விலகினால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வலுவிழக்கும். ஆனால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை முன்னெடுக்கலாம்.
