” இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. இதனை உணர்ந்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துரைகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியா பல வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றது. குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என சுமார் 123 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பொருட்களை இலங்கை மக்களுக்கு அனுப்பிவைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வந்துள்ளார். இது தொடர்பில் சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார். இதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகின்றோம். நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலைஞர் காலம் தொட்டே இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுகின்றது. அப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சியிலும் தமிழக முதல்வரின் பங்களிப்பு அதிகமாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும்.
இலங்கைக்கு இந்தியா எல்லா வழிகளிலும் உதவுகின்றது. அந்நாட்டின் பிரதமர் மோடியை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் இலங்க வந்தபோது, கூட்டு சமஷ்டியை வலியுறுத்தியிருந்தார். அந்த கோரிக்கை தொடர்பிலும் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.
