You are currently viewing ’19’ ஐ அமுலாக்கவும் – இல்லையேல் பதவி விலகவும்

’19’ ஐ அமுலாக்கவும் – இல்லையேல் பதவி விலகவும்

“ அரசமைப்பின் 19ஆவது  திருத்தச்சட்டத்தை மீள அமுல்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள்கூட வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயத்தை செய்வதற்கும் அரசு  இழுத்தடிக்கின்றது. மறுபுறத்தில் இந்த அரசுமீது  சர்வதேசத்துக்கும் நம்பிக்கை இல்லை. எனவே, அரசு பதவி விலக வேண்டும்.”  

இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என 96 வீதமானோர் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பான கருத்து கணிப்பும் வெளியாகியுள்ளது. தமது எதிர்காலம் நாசமாகிவிடுமோ என்ற அச்சம் இளைஞர்களை சூழ்ந்துள்ளது. அதனால்தான் அவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.  

19 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் உறுதியளித்தார். பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. 19 வும், 20 வும் கலந்ததாக 21 வரவேண்டும் என கூறப்படுகின்றது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.  இது காலத்தை இழுத்தடிக்கும் செயலாகும். 19 ஐ அமுல்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்த கோரிக்கைகூட ஏற்றுக்கொள்ளப்படாமல் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.  

இந்த அரசுமீது சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கை இல்லை. புதிய ஆட்சி அமைந்தால் சர்வதேச நேசக்கரம் நீட்டும். எனவே, ஜனாதிபதியும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலகவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வரும்வரை, ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு, பிரச்சினையை இழுத்தடிக்கவே அரசு முற்படுகின்றது. இது தவறான எதிர்பார்ப்பாகும். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை விரைவில் விவாதத்துக்கு எடுத்து, ஆட்சியை விரட்ட சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் சபாநாயகருக்கும் மன்னிப்பு ஏற்படும்.” – என்றார். 

Leave a Reply