வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய தருணத்தில், அதனை குறைத்து அரசு வரலாற்று தவறிழைத்துவிட்டது. சர்வதேச நாணய நிதியத்தை நாடும் முடிவை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். 50 மில்லியன் அமெரிக்க டொலரே தற்போது கையிருப்பில் உள்ளது. 21 அதிருத்தச்சட்டம் விரைவில் முன்வைக்கப்படும்.”
இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கை தற்போதுதான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை முறையாக முகாமை செய்து, அதனை ஓர் ஆசிர்வாதமாக மாற்றிக்கொள்வதா அல்லது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, நிலைமையை மோசமாக்கி, வெனிசுலா, லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டதொரு நிலைமையை இங்கு ஏற்படுத்துவதா என்ற சவால் எம்முன் உள்ளது.
எமது நாட்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வரி வருமானம் 25 வீதமாக இருந்தது. இது தொடர்ச்சியாக குறைவடைந்து, தற்போது 8.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு அனைத்து அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும். மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தபட்சம் 15 வீத வரிவருமானம் இல்லாவிட்டால், நாட்டை நிர்வகிப்பது கடினம்.
தற்போதைய நெருக்கடி நிலைமையை ஒரு மாதத்தில் தீர்ப்பேன் என நான் கூறியதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அவ்வாறு கூறுவதற்கு நான் முட்டாள் அல்லன். குறைந்தபட்சம் இரு வருடங்களாவது தேவை. இரண்டு வருடங்களா அல்லது 10 வருடங்களா என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில்தான் உள்ளது. தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய நிலையில் கையிருப்பில் உள்ளது.
வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய நேரத்தில், அதனை குறைப்பதற்கு எடுத்த முடிவு வரலாற்று தவறாகும். நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு தூண்டிலை வழங்குவதற்கு பதிலாக, மீனையே வழங்கும் நடைமுறையால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். முதலீடுகள் வரவேண்டும். அவசர நிதி உதவி குறித்து உலக நாடுகளுடன் பேச்சு நடத்திவருகின்றோம். உலக வங்கி வழங்கும் அவசர நிதியை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேச்சு நடத்துகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவடைய 6 மாதங்கள்வரை செல்லும். புதிய வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
19 ஆவது திருத்தச்சட்டம் மீள, திருத்தங்கள் சகிதம் செயற்படுத்தப்படும். இதற்காக 21 ஐ முன்வைப்பதற்கு அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்றார்
