புதிய அரசமைப்புக்கான வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதன்போதே குறித்த உப குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரண மற்றும் அலி சப்ரி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 2020 செப்டம்பரில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நிபுணர்கள் குழுவின் ஆரம்ப அறிக்கை கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காகவே குறித்த உப குழு அமைக்கப்பட்டுள்ளது.
