You are currently viewing ’13’ முழுமையாக அமுலுக்கு வரும் – அண்ணாமலை நம்பிக்கை

’13’ முழுமையாக அமுலுக்கு வரும் – அண்ணாமலை நம்பிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர்  யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கருத்திக் கொண்டு இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

நிதி ரீதியாகவும் எரிபொருள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வருகின்றது.

அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அந்த வகையில் அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

அதேவேளை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

அதே போன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என நாம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தான் ஆனால் சிறைத்தண்டனை அனுபவிப்பதற்காக எந்த ஒரு இந்திய மீனவரும் இலங்கைக்கு வருவதில்லை. தொழில் செய்வதற்காக அவர்கள் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் அவருடன் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

…………