” அரசியல் வரலாறு தெரியாத ஒருசிலர், என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தலாம். இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் கூட்டறிக்கையையும் விடுத்திருந்தனர்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் கூட்டு கோரிக்கையும் இதுவாகவே இருக்கின்றது.
ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று எழுதிய கடிதத்திலும், ‘பிரதமர் பதவி விலகவேண்டும்’ என்ற விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ” பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனரே, ” – என பிரதமரிடம், நெத் வானொலியின் ஊடகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,
” பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு கோரவில்லை. அரசியல் மற்றும் கட்சி வரலாறு தெரியாத ஒரு சிலர் அவ்வாறு கூறி வரலாம். என்னிடம் இது பற்றி எவரும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கவும் மாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.
” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க பிரதமர் உள்ளடங்கலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாரே” என எழுப்பட்ட கேள்விக்கு,
” என்ன இடைக்கால அரசு? இணக்கப்பாடின்றி அதனை எப்படி செய்வது? இடைக்கால அரசை உருவாக்குவதாக இருந்தாலும் அதனை எனது தலைமையிலேயே மேற்கொள்ள வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் அமையும் நடவடிக்கையை எவரும் ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். ” – என்று பதிலளித்தார் பிரதரமர்.
அதேவேளை, காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆளுங்கட்சியுடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும். அப்போதுதான் தீர்வை தேடலாம். பேச்சுக்கு வராவிட்டால் போராட்டத்தை தொடரவேண்டிதான் வரும் .
போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த அலரிமாளிகை கதவு திறந்தே உள்ளது. தேவையான தரப்புகளுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்து கொடுக்க நான் தயார்.” – என்றார்.
