You are currently viewing ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க பொன்சேகா எதிர்ப்பு!

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க பொன்சேகா எதிர்ப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை  முற்றாக நீக்குவதற்கு,  2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக  களமிறங்கிய – முன்னாள் இராணுவத்  பீல்ட்மார்ஷல் சரத்  பொன்சேகா  எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.  

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்ற ஆட்சி முறைமையை உருவாக்கும் விதத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியால் 21 ஆவது திருத்தச்சட்டமூலம்  தனிநபர் பிரேரணையாக சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.  

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியில் தவிசாளர் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா,  பிரச்சினைக்கு, அரசமைப்பு மறுசீரமைப்பு தீர்வு  அல்லவெனவும், அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

” ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கருத்து முன்வைக்கப்பட்டுவருகின்றது, உதாரணமாக பாடசாலையில் அதிபர் ஒருவர் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டால் , அதிபர் பதவியையே இல்லாதொழிப்பதா அதற்கு தீர்வு?  ,  அவ்வாறான அதிபரை நீக்கிவிட்டு, தகுதியானவரை பதவிக்கு நியமிக்க வேண்டும்.” – எனவும் சுட்டிக்காட்டினார்.  

அத்துடன், அமெரிக்கா, ரஷ்யா,  சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஜனாதிபதி ஆட்சி முறைமையே இருக்கின்றது. எனவே, நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் உரிய வகையில் செயற்படக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கலாம். தகுதியான நபர்கள், தகுதியான இடத்துக்கு வரவேண்டும்.  

பலவீனமான ஜனாதிபதி ஒருவர், பிரதமரானால் என்ன செய்வது?  எனவே ,பதவிகளை நீக்குவதோ, அரசமைப்பு மறுசீரமைப்போ பிரச்சினைக்கு தீர்வு அல்ல,  இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பதே எனது கருத்து.  ஊழல் அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும். ” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார். 

 அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி எமது கட்சிக்கு கிடைக்குமானால்,  ஆட்சியை பொறுப்பேற்க தயார்.”  – எனவும் பொன்சேகா அறிவித்தார்.  

21 ஆவது திருத்தச்சட்டமூலம் 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, நாடாளுமன்ற ஆட்சிமுறைமையை ஏற்படுத்தும் வகையிலான அரசமைப்பு திருத்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று  (21.04.2022) சபாநாயகரிடம் கையளித்தது.  

பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் தனிநபர் பிரேரணையாக அது கையளிக்கப்பட்டுள்ளது. 

அப்பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் ஒரு விட குறிப்புகள் வருமாறு, 

✍️நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.  

✍️ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும். நாட்டின் தலைவர் அவர், ஆயுதப்படைகளின் பிரதானியும் அவர். 

✍️ பிரதமருடன் கலந்துரையாடி, ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.  அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயற்பவடுவார்.  

✍️அமைச்சரவை எண்ணிக்கை 25. அமைச்சரவை அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை 25.

 ✍️நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் 5  வருடங்கள். நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றினால் முன்கூட்டியே கலைக்க முடியும்.

✍️கட்சி தாவும் உறுப்பினர், அமைச்சு பதவியை வகிக்க முடியாது. 

✍️அரசியலமைப்பு பேரவை உருவாக்கம். 5 சிவில் பிரதிநிதிகளுக்கு இடம். 

✍️தேசிய பாதுகாப்பு சபை உருவாக்கம். 

✍️தகவல் அறியும் ஆணைக்குழு உருவாக்கம். 

( 21 இல் உள்ள முக்கிய விடயங்களின் தொகுப்பு ஆங்கில மொழியில் இணைக்கப்பட்டுள்ளது) 

எதிரணியில் இருப்பதால்,  ஐக்கிய மக்கள் சக்தியால் தனிநபர் பிரேரணையாகவே 21 முன்வைக்கப்பட்டுள்ளது.  எனவே, அது சட்டமாவதற்கு காலமெடுக்கலாம். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க கோருவதால், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அப்பால், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டி வரலாம்.   

இதற்கிடையில்  20 ஐ நீக்கிவிட்டு, 19 ஆவது திருத்தச்சட்டத்தை  திருத்தங்களுடன் செயற்படுத்துவதற்கு ஆளுந்தரப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. அதற்கான சட்டமூலமும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் திருத்தங்கள் சகிதமே 19 நிறைவேற்றப்பட்டது. எனவே, அதில் திருத்தம் மேற்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது என்பதே சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான தமது யோசனையை 11 கட்சிகளின் கூட்டணி, சபாநாயகரிடம் இன்று கையளிக்கவுள்ளது.

Leave a Reply