You are currently viewing ‘புதிய அமைச்சரவையால் அரசியல் நெருக்கடி மேலும் தலைதூக்கும் அபாயம்’

‘புதிய அமைச்சரவையால் அரசியல் நெருக்கடி மேலும் தலைதூக்கும் அபாயம்’

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தாம் பதவி விலக தயாரில்லை என்ற உறுதியான தகவலை புதிய அமைச்சரவை நியமனம் ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார்.  

அத்துடன், ஜனாதிபதியின் இந்த நகர்வின் மூலம் நாடாளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கிய வகையில்  இடைக்கால அரசமைக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.   

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவி ஏனைய அனைத்து அமைச்சர்களும் ஏப்ரல் முதல் வாரத்தில் பதவி விலகினர்.  இதனையடுத்து நால்வர் மட்டும் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர்.  

வெளிவிவகார  அமைச்சராக பீரிசும், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,  பெருந்தெருக்கல் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்பட்டனர். 

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 17 பேர் கொண்ட அமைச்சரவை  இன்று நியமிக்கப்பட்டுள்ளது.  

இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட மொட்டு கட்சியின் 11 பேர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.   

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சர்கள் பட்டியல் விவரம் 

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம்,  உள்நாட்டலுவல்கள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சர். 

டக்ளஸ் தேவனாந்தா – கடற்றொழில் அமைச்சர்.  

 ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர். 

 பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர். 

 திலும் அமுனுகம –  போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர். 

கனக ஹேரத் –  நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

 விதுர விக்கிரமநாயக்க –  தொழில் அமைச்சர்.

ஜனக வக்கும்புர-  விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்துறை அமைச்சர்.

 ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் அமைச்சர். 

 விமலவீர திஸாநாயக்க – வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்.

 காஞ்சனா விஜேசேகர – எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

 நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்.

சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.

நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர் 

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்.    

அதேவேளை, எதிரணியால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரண தோற்கடிக்கப்படும் என்று புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். 

மறுபுறத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி போராட்டக்காரர்கள் திட்டிட்டுள்ளனர். எதிரணிகளும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை விஸ்திரப்படுத்தவுள்ளன.

Leave a Reply