ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியன தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நாளை மறுதினம் 17) நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அந்த வாரத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிருந்தது.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு முன்னெடுக்கவுள்ள நிலையில் இவ்விரு பிரேரணைளையும் முன்வைத்தால் அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கமாக அமைந்துவிடும், அவரச உதவி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தவிடும் என்பதால் பிரேரணைகளை முன்வைப்பதை தற்காலிகமாக பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு, பொருளாதார நிபுணர்களால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு வாரம்வரை இதனை ஒத்திவைப்பதற்கு முடியுமா அல்லது இது விடயத்தில் கையாள வேண்டிய அணுகுமுறைகள் பற்றி ஆராயவே அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நலன்கருதி, எதிரணி இவ்வாறு செயற்படுவது சிறந்த அரசியல் நல்லிணக்கம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
