You are currently viewing ‘அரசமைப்பைமீறும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை’

‘அரசமைப்பைமீறும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை’

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதற்கான ஆவணத்தில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது. 

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போதே, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்தார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, 

” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஜனாதிபதி முறைமையின்கீழ் இடைக்கால அரசு பற்றியோ அல்லது காபந்து அரசு பற்றியோ கதைப்பதில் எவ்வித பயனும் கிடையாது.  தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். அவர்மீது எமக்கு நம்பிக்கை இல்லை. 

எனவே, அவர் ஜனாதிபதி பதவியில் தொடரும்வரை மாற்று அரசு பற்றி சிந்திப்பதில் பயன் இருக்காது.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் வகையில் அரசமைப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும். அரசமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.  ராஜபக்சக்கள் இல்லாத அரச கட்டமைப்பு உருவாக வேண்டும்.

இவற்றை செய்ய அரசு முன்வராவிட்டால்,  மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து ஜனாதிபதி பதவி விலகாவிட்டால், அரசமைப்பு ரீதியில் செயற்பட வேண்டிய நிலைமை எமக்கும் ஏற்படும். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு வழங்க வேண்டும். 

நாம் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக வழியிலேயே மக்கள் போராடுகின்றனர். அதனை குழப்புவதற்கு ஆளுந்தரப்பே முற்படுகின்றது. எனவே, மக்கள் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” – என்றார்.

சஜித் பிரேமதாசவின் உரையின் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துவிட்டது.