You are currently viewing அரசமைப்பைமீறும் தீர்வு நிரந்தரமாகாது!

அரசமைப்பைமீறும் தீர்வு நிரந்தரமாகாது!

அரசமைப்புக்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த தீர்வும் நிரந்தரமாகாது. அது தொடர் பிரச்சினைக்கே வழி வகுக்குமென முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இத்தருணத்தில் ஆராய வேண்டியுள்ளது. அதற்கான வாய்ப்பையே ஜனாதிபதி தற்போது அனைவருக்கும் வழங்கியுள்ளாரென்றும் அவர் கூறினார்.

மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவை அமைதியான போராட்டங்களாக அமைய வேண்டுமே தவிர வன்முறைக்கு வழி வகுக்கக்கூடாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியதென்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்படுமென்று தவறான விமர்சனங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது முற்றாக உண்மைக்குப் புறம்பானது.

மக்களுக்கான சம்பளம் மற்றும் பண்டிகைக்கால கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 125 பில்லியன் ரூபா நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மேலும் 13 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இன்றைய நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பொறுப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தின் போதே முன்னாள் நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மக்கள் எதிர்ப்பு அரசுக்கு மட்டுமானதல்ல. நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்குமானதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். நாம் மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்துள்ளோம். அதன்படியே அவசரகாலச் சட்டம் மீளப் பெறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட்டது. அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு நாம் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம். அமைச்சுப் பதவிகளை ஏற்று இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் பிரச்சினைகளை நன்றாக அறிந்தே எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

நெருக்கடிகள் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை நாம் முன்னோக்கி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலேயே இப்போது சிந்திக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க இணைந்து செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. மக்கள் தம் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் போது அதனை வன்முறையாக மாற்ற சிலர் முனைகின்றனர். வீடுகளுக்கு கற்களை எரிவதும் அச்சுறுத்துவதும் நடைபெறுகிறது. நிலைமையே வேறு விதமாக முன்னெடுப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எவரேனும் நாட்டை ஆளுவதானாலும் முதலில் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். இடைக்கால அரசை அமைத்து சிறந்த ஆலோசனைகளையும் ஹர்ஷ போன்றோரின் திறமைகளை பயன்படுத்துவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும். அதற்காக நாம் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.

மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொடுப்பதோடு வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் நாம் ஒரு பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமோ உலக வங்கியிடமோ செல்ல வேண்டியுள்ளது.

நாட்டில் நிலையான தன்மை இல்லாவிட்டால் அமைச்சர்கள் இல்லாவிட்டால் எவ்வாறு அங்கு செல்ல முடியும்? யார் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்பதை சிந்திக்க வேண்டும்.

அரசியலமைப்பை மீறி அரசியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. அது நிரந்தரமான தீர்வாக முடியாது. நூற்றுக்கு 80 வீதம் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக அந்த தீர்வு அமையவேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள ஆலோசனையின்படி நாம் எமது நட்பு நாடுகளுடன் ஒரு கழகம் அமைத்து நிதி தொடர்பான உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா,சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளடங்கியதாக அது அமைய வேண்டும்.

நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் நாடு என்ற வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply