You are currently viewing ‘அரசியல் மயம்’ – சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை!

‘அரசியல் மயம்’ – சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை!

 சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்  மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சட்டா அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை முன்வைக்கப்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.   

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு நிறைவேற்று மற்றும் சட்டவாக்க துறை மட்டுமல்ல நீதித்துறையும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

” சட்டத்தரணிகள் இன்று வீதிகளில் உள்ளனர். காட்டாட்சிமூலம் ஜனநாயகத்துக்கு சவால் விடுக்க முடியாது.   

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. சில வழக்குகளுக்கு சாட்சியங்கள் முன்வைக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் விடுதலையாகின்றனர். மல்வானை வழக்கிலும் அப்படிதான் நடந்துள்ளது. இந்நிலைமை தொடரக்கூடாது. 

அவ்வாறு தொடர்ந்தால் சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதன் ஊடாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  

அதேவேளை, மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக அரசு தயார் இல்லை. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்க எதிரணியும் தயார் இல்லை. எனவே ,நாடாளுமன்றம் எதற்கென மக்கள் கேட்கின்றனர். தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்காக பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது கட்சித் தலைவர்களின் கடப்பாடாகும். எனவே, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்.” – என்றும் விஜயதாச ராஜபகச கூறினார்.