நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு ஜனநாயக வழியில், அரசமைப்பு ரீதியாக பொதுவானதொரு வேலைத்திட்டத்தை இவ்வாரத்துக்குள் உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் – அதனை செயற்படுத்துங்கள்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.
நாடாளுமன்றம் இன்று (06.04.2022) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே, மக்களின் சார்பில் தான் இந்த கோரிக்கையை விடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
“ கடும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில் நாடு உள்ளது, இந்நிலைமை மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாலேயே ‘ஆரம்பகட்டம்’ என நான் குறிப்பிடுகின்றேன்.
இன்று நிலவும் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கான தட்டுப்பாட்டை விடவும், கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையை அப்படியே விடுவதா அல்லது ஓரளவேனும் கட்டுப்படுத்திக்கொள்வதா என்பது இனிவரும் நாட்களில் நாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, நாடாளுமன்ற வளாகத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை பற்றியும் சபாநாயகர் விவரித்தார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நம்புபவர் என்ற அடிப்படையில் இத்தகைய சம்பவங்களை தான் கண்டிப்பதாகவும், இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, அழுத்தங்களால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
யாரால் இந்நிலைமை ஏற்பட்டது, தவறு எங்குள்ள என்பது பற்றி விவாதித்து பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளாமல், தற்போது என்ன செய்ய வேண்டும், அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விவாதித்து, ஒன்றுமையாக தீர்வை எட்டுங்கள். கூட்டு நடவடிக்கை வெற்றியளிக்கும் என்ற பாடத்தை வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
“ நாடாளுமன்றம் தற்போது எதிர்கொண்டுள்ள இந்நிலைமையை ஜனநாயக வழியில் தீர்க்கலாம் என நாம் நம்புகின்றேன். அவ்வாறு முடியாமல்போனால் அதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்கடிக்கப்படும். மீண்டும் இருண்ட யுகம் உருவாகக்கூடும். எனவே, தோல்வி அடையாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” – என சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
“ அரசியல் பேதங்களை , அரசியல் நோக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான பொது வேலைத்திட்டத்தை அரசமைப்பின் பிரகாரம் ஜனநாயக வழியில் எடுக்கவும், அதனை செயற்படுத்தவும். இவ்வாரத்துக்குள் அதனை செய்யு முடிக்கவும். இதன்மூலம் நாடாளுமன்றத்தின் உயரிய தன்மையும், மக்களும் பாதுகாக்கப்படுவார்கள்.” – என்றும் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
