You are currently viewing அவசரகால சட்டம் நீக்கம்!

அவசரகால சட்டம் நீக்கம்!

நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக அமுலில் இருந்த அவசரகால சட்டம், இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது.  இதற்கான அரச இதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ளது.   

அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம். எனினும், நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவு ஆட்டம் கண்டுள்ள நிலையிலேயே, அவசரகால சட்டத்தை இரத்து செய்வதற்கான அரசிதழை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். 

எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்தன. மறுபுறத்தில் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்தன. 

அத்துடன், ஜனாதிபதி பதவி விலக வேண்டும், அரசு பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களும் எட்டு திக்கிலும் ஒலிக்க ஆரம்பித்தன. இதனால் நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவானது. 

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலேயே,  ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவே இந்த ஏற்பாடு என அரச தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆனால், ஜனாதிபதி இந்த முடிவை ஜனாதிபதி மீளப்பெற வேண்டும் என பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. சிவில் அமைப்புகளும் அழுத்தம் கொடுத்தன.  அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தன. 

இந்நிலையிலேயே அமுலில் இருந்த அவசரகால சட்டத்தை இரத்து செய்வதற்கான அரசிதழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. 

Leave a Reply