ஒரு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் இன்னொரு நீதிமன்றில் குற்றமற்றவர் என முடிவு செய்வது விசித்திரமாய் உள்ளது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தால் சுதந்திரமாக வாழும் உரிமை பறிக்கப்படுகின்றது என அரசியல கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருமாறு,
” இரத்தினபுரி மேல் நீதிமன்றில் 2020.7.31 திகதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜயசேகர உட்பட மூவர் 2022.3.31 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றவாளிகள் இல்லையெனக் குற்றங்களிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் இன்னொரு நீதிமன்றில் குற்றமற்றவர் என முடிவு செய்வது விசித்திரமாய் உள்ளது. இது சட்டங்களில் உள்ள ஓட்டையா? சட்டத்தரணிகளின் வாதத் திறமையாலா? என்பதே பொதுமக்களின் கேள்வி.
இவ்வாறு விடுதலை பெற முடியாதவர்களை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெறுவது நாட்டில் நிலவும் அரசியல் கலாசாரமாக உள்ளது. அதிகாரத்தோடு தொடர்புடையவர்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் நீதி தேவதை சார்போ எனவும் சாதாரண மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவ்வாறான நிலையில் அதிகாரத்தோடு தொடர்பும் பண பலமும் இல்லாத சாதாரண அடித்தட்டு மக்கள் சிறையில் வாடுபவர்களின் உறவினர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் இறுக்கம் மற்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதித் துறையினதும் அதிகாரிகளினதும் அசமந்த போக்கு என்பன காரணமாகவும் சட்ட நுணுக்க அறிவு கொண்ட போதிய சட்டத்தரணிகள் இன்மையாலும் அரசியல் கைதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் சுதந்திரமாக வாழும் உரிமையை பறிக்கும் செயல். மனித உரிமையை அப்பட்டமாக மீறும் செயல்.
அதுமட்டுமல்ல பிணை இன்றி நீண்ட காலம் சிறையில் வாடுகின்றனர். அத்தோடு பிணை வழங்குவதற்குச் சிபாரிசு செய்யக்கூடிய அதிகாரம் கொண்டவராக சட்டமா அதிபர் விளங்கிய போதும் அரசியல் கைதிகளின் விடயத்தில் அதனை செய்யாமல் இருப்பது அரசியல் காரணம் என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் பயிற்சி முகாமில் பங்கேற்றதாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்குச் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 25ஆம் திகதி பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் அக்கறையின்றி இருப்பது ஏன்? ஒரே நாடு ஒரே சட்டம். ஆனால் தமிழர்கள் அன்னியமாகப் பார்க்கப்படுகிறனர் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணமாகும். அண்மையில் ஜனாதிபதியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுமந்திரன், 10 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை வெளியில் விடுவது தொடர்பாக நீதி அமைச்சரோடு கலந்தாலோசித்து விடப்படும் என தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் அத்தனை பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தவிர அவர்களை வகைப்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவது என்பது அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் செய்கின்ற துரோகமாகவும் அமையும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் செய்து பயன் இல்லை. அது முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – என்றுள்ளது.
