” இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப் பெற வேண்டும்.”
இவ்வாறு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (01) வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன.
எனவே, இவற்றை ஒடுக்குவதற்காகவே அவசரகால நிலையை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், போராடும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த முடிவை அரசு மீளப்பெற வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப் பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சுமந்திரன்
“இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப் பெற வேண்டும்.
அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது.
இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ, சுமந்திரன் எம்பி. தெரிவித்தார்.
அதேவேளை, அவசரகால நிலை பிரகடனம் மூலம் மக்களின் உரிமை மீறப்படுவதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவசரகால நிலைமை பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய சோசலிசக்கட்சி உட்பட பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அவசர நிலை என்றால் என்ன?
அவசர நிலை அமுலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே பொலிசாருக்கு அதிகாரங்கள் அதிகரிக்கும்.
குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைதுசெய்து குறிப்பிட்டகாலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் பொலிசார் தடுத்துவைக்க முடியும்.
தேவைப்படும் இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவும் பொலிசாருக்கு அதிகாரம் இருக்கும்.
பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.
தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகளைக்கூட அமைக்கலாம்.
பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் உருவாவதைத தடுக்க பயன்படுத்தப்படும்.
வன்முறைகள் ஏற்படும் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் பொலிசாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.
தேவையான இடங்களில் ஊரடங்குச் சட்டங்களை பிறப்பிக்க முடியும்.
ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கைகள் அமுல்படுத்தப்படும்.
குறிப்பாக சமூக ஊடகங்களே வன்முறைகளைப் பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
