மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் ‘சூழ்ச்சி’ ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பிலும், மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் தூண்டப்பட்டுள்ளனரா என்பது சம்பந்தமாகவும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ்தான் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மிரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை பொலிஸார் எவ்வித அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. மக்களின் போராடும் உரிமைக்கு அவர்கள் மதிப்பளித்தனர். எனினும், இரவு 10 மணிக்கு பிறகு போராட்ட வடிவம் மாறியுள்ளது.
இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், போராட்டக்காரர்கள் கட்டுப்படவில்லை. அதன்பின்னர் தண்ணீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தின்போது ண்ணொருவர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சிஐடியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
24 பொலிஸார் காயம் அடைந்துள்ளனர். தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
போராடும் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். அதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனினும், அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீ மூட்டுதல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸாருக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட விசேட சட்டம் எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது. சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உட்பட சாதாரண சட்டத்தின் பிரகாரமே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
