You are currently viewing இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் உயர் பதவி வகிக்க தடை – வருகிறது தனிநபர் சட்டமூலம்

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் உயர் பதவி வகிக்க தடை – வருகிறது தனிநபர் சட்டமூலம்

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்ககோரும் அரசமைப்பு திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.   

தனிநபர் சட்டமூலமாகவே இதற்கான யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.   இது 22ஆவது அரசமைப்பு திருத்தமாக கருத்தில் கொள்ளப்படும். 

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு நீதிபதிகள், தூதுவர்கள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகிக்க முடியாது. அத்துடன், நாடாளுமன்றம் வரமுடியாது. தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இரட்டை குடியுரிமை உடையவரகள் நாடாளுமன்றம் வருவதற்கு 19ஆவது திருத்தச்சட்டத்தில் தடைவிதிக்கப்பட்டது. எனினும், 20ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அத்தடை நீக்கப்பட்டது. இதன்மூலம்தான் பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்வரக்கூடிய சூழ்நிலையும் உருவானது. 

20ஆவது திருத்தச்சட்டத்தில் இரட்டைக்குடியுரிமை ஏற்பாட்டுக்கு உதய கம்மன்பில உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும் இறுதியில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையிலேயே இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு உயர்பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கும் திட்டம், அரசமைப்பு திருத்தமாக முன்வைக்கப்படவுள்ளது. 

Leave a Reply