You are currently viewing ‘புதிய அரசமைப்பு சாத்தியப்படாது – அன்றே சொன்னேன்’

‘புதிய அரசமைப்பு சாத்தியப்படாது – அன்றே சொன்னேன்’

 புதிய அரசமைப்பு சாத்தியப்படாது என அன்றே நான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டினேன். முடியும் என அவர் கூறினார். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.” 

இவ்வாறு ‘தேசிய பிக்கு அறிஞர்களின் கருத்தரங்கு’ அமைப்பின் பிரதானியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். 

11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.  

அவர் கூறியவை வருமாறு,

” 2015 இல் பஸில் ராஜபக்சவால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் பாரிய சக்தியாக மாறுவார் என்பதும் எமக்கு தெரியும். எனவே, இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு தடை விதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரினோம். புதிய அரசமைப்பு ஊடாக இந்த விடயம் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

சந்திரிக்கா, ரணில் மற்றும் மைத்திரியால் புதிய அரசமைப்பை கொண்டுவரமுடியாமல்போனது. எனவே, அது சாத்தியமாகாது என நான் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன். 

இதற்கு பதிலளித்த அவர், நானும் அப்படியானவன் என நினைக்கின்றீர்களா என கேட்டார். ஆனால் இன்று 11 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்தும் கட்டத்தக்கு நாடு வந்துள்ளது.  எனவே, மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க முன்வருமாறு ஜனாதிபதிக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். 

எமது நாட்டில் மன்னர் ஒருவர் இருந்தார். நாட்டை பாதுகாப்பதற்காக தனது மகளை அவர் கடலில் போட்டார். பஸில் ராஜபக்சவை நாம் கடலில் போட சொல்லவில்லை. அவரை ஒதுக்கி வைக்குமாறுதான் கோருகின்றோம்.” – என்றார்.  

அரசு கவிழும் 

” இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரலாம் என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இலகுவாக இழக்க நேரிடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

” ஆளுங்கட்சி வசம் தற்போது 123 ஆசனங்களே உள்ளன. எனவே, இன்னும் 12 பேர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். தற்போதைய சூழ்நிலையில் 12 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, உரிய தருணம்வரும்போது எமது பலத்தை காட்டுவோம். – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.