தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடன் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிச்சயம் உதவி பெறலாம் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று (24.03.2022) தெரிவித்தார்.
அத்துடன், சர்வக்கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி. கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து முதலீடுகளைப் பெறலாம் என சில தரப்பினர் யோசனைகளை முன்வைத்தனர். அது தொடர்பில் நாமும் கருத்து வெளியிட்டோம்.
அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்காமல் இது சாத்தியப்படாது என சுட்டிக்காட்டினோம். அவ்வாறு தீர்வு முன்வைக்கப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள். அதற்கான உறவு பாலமாக நாம் செயற்படுவோம்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்கு அப்பாலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம். ஆளுநர் வசம் அல்லாமல், மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள்வசம்தான் அதிகாரம் இருக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களிடம் பணபலம் உள்ளது. அரசியல் தீர்வு இல்லையேல் அவர்கள் உதவமாட்டார்கள். ” -என்றார் சுமந்திரன்.
