பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கான உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன், மேலும் முன்னேற்றம் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட்(Victoria Nuland) நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது, சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதியால், திருமதி நூலண்ட்டுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவை குறித்து தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி , வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பசுமைத் தொழிநுட்பத்தை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தவும், சைபர் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமதி நூலண்ட் தெரிவித்தார்.
இந்நாட்டின் கல்வி வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் மூலம், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளினால், இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைத் தணிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல தீர்மானித்ததாக ஜனாதிபதிதெரிவித்தார்.
அந்த தீர்மானம் தொடர்பாகவும், அதேபோன்று உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் திருத்தத்திற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் திருமதி நூலண்ட் பாராட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களின் மூலம், மின் உற்பத்திக்கான சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி தூதுக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.
