You are currently viewing பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு ஏற்படும் மாற்றங்கள்…

பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு ஏற்படும் மாற்றங்கள்…

அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தத்தில், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெறும் கண்துடைப்பென இதனைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட அமைச்சர், சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டுமாயின் மக்கள் ஆணை அவசியமென்றும்  தெரிவித்தார். 

பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் கூறியவை வருமாறு, 

” பயங்கரவாத தடை சட்டம் மிகவும் பழமை வாய்ந்தது. 43 ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள இச்சட்டத்தை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அடிப்படை விடயங்களில் முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.

முழுமையாக திருத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். பல்வேறு அரச நிறுவனங்களை இணைத்துக் கொண்டே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது அவசரமான திருத்தங்கள் தேவைப்படுகின்றன. சமூக மாற்றத்தை கவனத்திற் கொண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திருத்தங்களை வெறும் கண்துடைப்பென கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆரம்ப நடவடிக்கை மட்டுமே.

இதனை காத்திரமாக முன்னெடுக்கும் வகையில், நீதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டமைச்சு ஆகியன விடயங்களை மேற்கொள்கின்றன.

இது ஆரம்பம் மட்டுமே. தேவைப்படுமிடத்து மேலும் திருத்தங்கள் முன்வைக்கப்படலாம். தனிப்பட்ட நபர் அனுபவிக்கக்கூடிய சுதந்திரம் தொடர்பில் இந்தத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் 14 ஆவது பிரிவின்படி சட்டப்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரமும் வழங்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பற்றியும் புதிய திருத்தத்தில் உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

எமது அரசு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 81 பேரை விடுதலை செய்துள்ளது. பிரிவு 13இன் கீழ், விடுவிக்கப்படுவோர் தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு விடுதலைகள் இடம்பெற்றுள்ளன. நீதித்துறை அனுபவம் கொண்ட குழு மூலமே அது இடம்பெறுகின்றது.

பொலிஸார் மற்றும் படையினரை விதி விலக்கான சமயங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் விசாரணை முடியும் வரை தடுத்து வைக்கப்பட வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு, உயர்நீதிமன்றம் தற்றுணிவின் பேரில் பிணை வழங்க முடியுமென மாற்றப்பட்டுள்ளது. தடுத்து வைத்தல் சட்டமானது சவாலுக்குட்படுத்த முடியாதென்பதை 09 ஆம் பிரிவில் தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டவரை பார்வையிடுவதற்கு நீதவானால் முடியும். அவர் அனுமதியின்றி செல்வதற்கான நிலை இதன் மூலம் வழங்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நலன் தொடர்பில் முக்கிய விடயங்கள் புதிய திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் தமக்கான சட்டத்தரணியை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு முன்னருள்ள சட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

குற்றவியல் சட்டத்தில் இதற்கான விடயங்கள் காணப்பட்டாலும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன் சட்டத்தரணியை பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது பல முறைகேடுகளை தடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தற்போதுள்ள சட்டத்தில், சட்டத்தரணி ஒருவரை பெற்றுக்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலும் அவ்வாறே நடைபெற்றது. அந்த நிலை இதன் மூலம் மாற்றப் பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சென்று பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நடைமுறையிலுள்ள சட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை.

திருத்தங்கள் தொடர்பில் எவரும் வாதங்களை முன்வைக்கலாம். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது, கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகள் தொடர்பில் விடயங்கள் புதிய திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒருவர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவர் தொடர்பில் 48 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

தடுத்து வைக்கப்படுபவர் சித்திரவதை அல்லது முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட முடியாதென்பது புதிய திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உடல் ரீதியாக மட்டுமல்ல உள் உணர்வு ரீதியாகவும் சித்திரவதைகள் இடம்பெற முடியாது என்பதை உறுதி செய்கிறது.

அதேபோன்று தடுத்து வைக்கப்படும் நபர் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அது தொடர்பில் நீதவான் கவனம் செலுத்துவார். சித்திரவதைக்கு உட்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சட்ட மருத்துவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.

அது குறிப்பிட்ட வழக்கின் அறிக்கையில் ஒரு பகுதியாக அமையும். சித்திரவதைகள் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை புதிய திருத்தம் உள்ளடக்குகிறது.

மனிதர்களுக்கான உயர்பாதுகாப்பு அத்துடன் இன, மத மக்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு என்பவை மனித உரிமையில் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இவற்றை கவனித்துக் கொண்டே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன், இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டு 51 மேலதிக வாக்குகளால் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை வழங்கிய பின்பு சட்டம் அமுலுக்கு வரும். 

Leave a Reply