இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு தற்போது இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.
கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராசமாணிக்கம், காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துடன், மனித உரிமைகளை மதிக்கும் நாடுகள் கைகோர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திலுள்ள 178 நாடுகளும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கும், மனித உரிமைகளை நிலை நிறுத்துவதற்கும் இதை கூடுதலாக முயற்சி எடுக்க வேண்டும் என்று சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த வருடங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஜனாசா எரிப்பு விடயம் தொடர்பாகவும் இந்த அமர்வின்போது கலந்துரையாடியதாக சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம்’ – திருத்தங்கள் போதுமானவை அல்ல!
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் போதுமானவையாக இல்லை. அவை சில்லறைத்தனமானவை. எனவே, மேலும் பல திருத்தங்கள் உள்வாங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்தது. திருத்தங்களையும் முன்வைத்தது. அவற்றை ஏற்பதற்கு ஆளுந்தரப்பு மறுத்துவிட்டது.
நாடாளுமன்றம் இன்று (22.03.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டம் இரண்டாம்வாசிப்புக்கென முன்வைக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு , வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியிருந்தது.
இந்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி (10) நாடாளுமன்றத்தில் , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அது தொடர்பான உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய சட்டமூலம் திருத்தி அமைக்கப்பட்டது. அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட சட்டமூலம்மீதே இன்று ( 22.03.2022) விவாதம் இடம்பெற்றது. குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் உள்வாங்கப்படும்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விவாத்தை ஆரம்பித்து உரையாற்றியதுடன், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றியும் விவரித்தார்.
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கும், புதிய சட்டத்துக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லை, ஒருமித்ததாகவே காணப்படுகின்றன என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் பீரிஸ் நிராகரித்ததுடன், புதிய சட்டம் எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார்.
