‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம்’ – திருத்தங்கள் போதுமானவை அல்ல!

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் போதுமானவையாக இல்லை. அவை சில்லறைத்தனமானவை. எனவே, மேலும் பல திருத்தங்கள் உள்வாங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்தது. திருத்தங்களையும் முன்வைத்தது. அவற்றை ஏற்பதற்கு ஆளுந்தரப்பு மறுத்துவிட்டது. 

நாடாளுமன்றம் இன்று (22.03.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.  இதன்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டம் இரண்டாம்வாசிப்புக்கென முன்வைக்கப்பட்டது. 

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு , வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியிருந்தது.   

இந்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி (10) நாடாளுமன்றத்தில் , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அது தொடர்பான உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய சட்டமூலம் திருத்தி அமைக்கப்பட்டது. அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட சட்டமூலம்மீதே இன்று ( 22.03.2022) விவாதம் இடம்பெற்றது.  குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் உள்வாங்கப்படும். 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விவாத்தை ஆரம்பித்து உரையாற்றியதுடன்,  மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றியும் விவரித்தார்.

நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கும், புதிய சட்டத்துக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லை, ஒருமித்ததாகவே காணப்படுகின்றன என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் பீரிஸ் நிராகரித்ததுடன், புதிய சட்டம் எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார். 

ஐக்கிய மக்கள் சக்தி

இச்சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் 

லக்‌ஷ்மன் கிரியல்ல,

” வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை. அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடும் அதுவே. 

இச்சட்டத்தின் பிரகாரம் பிடியாணையின்றி ஒருவரை கைது செய்யலாம். வீட்டை சோதனையிடலாம். வாகனங்களை பறிமுதல் செய்யலாம். பொலிஸார் சீருடையின்றி போகலாம். இவ்வாறு செய்வது சரியா? 

கைது செய்யப்படும் நபரை 72 மணிநேரம் தடுத்து வைக்கலாம். இந்த காலப்பகுதிக்குள்தான் எல்லாம் நடக்கும். பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படும். எனவே, 24 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நாம் கோருகின்றோம்.

18 மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதை ஒரு வருடமாக்கப்பட்டுள்ளது. அதனை இரு மாதங்கள்வரை குறைக்குமாறு பரிந்துரைக்கின்றோம்.  தீவிரவாதிகளுக்காக நாம் இந்த சலுகைகளை கோரவில்லை, நாட்டு மக்களுக்காகவே கோருகின்றோம். ஏனெனில இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு மட்டும் தாக்கம் செலுத்தப்போவதில்லை. மக்கள்மீதும் பாயும். ” – என்றார் கிரியல்ல.

எனினும், திருத்தங்களை ஏற்பதற்கு வெளிவிவகார அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். அதற்கான காரணம் தனது பதில் உரையின்போது விளக்கமாக வழங்கப்படும் என பீரிஸ் குறிப்பிட்டார். 

அதேவேளை, இறுதி இறுதியான சட்டம் அல்ல, எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் ஆளுந்தரப்பால் வழங்கப்பட்டது.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய

” இது முழுமைப்படுத்தப்பட்ட சட்டமூலம் அல்ல. எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். எனினும், முன்னர் இருந்த சட்டத்தைவிடவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நல்லாட்சியின்போது மூன்றில் இரண்டு பலம் இருந்தது. இருந்தும் அவர்கள் சட்டமூலத்தை கொண்டுவரவில்லை. இந்த சட்டத்தை மாற்றுவதற்கான தேவையும் இருக்கவில்லை. முன்னர் இருந்த சட்டத்தைவிடவும் புதிய சட்டத்தில் முன்னேற்றம் உள்ளது என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இச்சட்டத்தின் ஊடாக மனித உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.” – என்றார்.