‘முக்கியமான சில சட்டதிருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி’

கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   

தொழில் வழங்குநரால் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளை மீறல் மற்றும் ஊழியர்களுக்கு உரித்தான நியதிச்சட்ட உரித்துக்களை அறவிட்டு வழங்கல் போன்ற குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூடிய வழக்குகள் அதிகமாக நீதவான் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளது. 

அதுதொடர்பான தீர்ப்புக்களை வழங்குவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை தெரியவந்துள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்காக நீதவான் நீதிமன்றத்திற்கும், தொழில் நியாய சபைக்கும் சமமான நீதிமன்ற அதிகாரம் கிடைக்கும் வகையில் கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதேவேளை, மேலும் சில சட்டங்களையும் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டம்

அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சட்ட வரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. 

அதற்கமைய, அபாயகர விலங்குகள் (திருத்தப்பட்ட) கட்டளைச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் மர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

 இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டம்

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட் டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டியதுடன், வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும்,

அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.