புதிய அரசமைப்பு சாத்தியமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கான ஆதரவு மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அதேபோல 2023 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் ஜனாதிபதி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றார். இவை உட்பட மேலும் சில காரணங்களாலேயே புதிய அரசமைப்புக்கான சாத்தியப்பாடு குறைவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சட்டவரைவு விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

அதிகாரப்பகிர்வு பற்றி நிபுணர்குழு கவனம் செலுத்தவில்லை எனவும், அது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்படி நிபுணர்கள் குழு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கோரியிருந்த நிலையில், அதனை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. எனவே, புதிய அரசமைப்புக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்கப்படுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கலாம். எனினும், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் அதில் அரசு திருத்தம் மேற்கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். அதனை பெறுவதில்தான் சிக்கல் நிலைமை உள்ளது.

உரிய அரசியல் தீர்வு இல்லையேல் தமிழ்க்கட்சிகள் அதனை ஆதரிக்காது, அதேபோல உச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டால் அதனை கடும்போக்கு வாதிகள் எதிர்க்க்கூடும். இவ்வாறான இடியப்ப சிக்கலாலேயே புதிய அரசமைப்புக்கான சாத்தியப்பாடுகள் குறைவென சுட்டிக்காட்டப்படுகின்றது. 

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, புதிய அரசமைப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி தரப்பில் இருந்து வழங்கப்படும் பதில்மூலம், அரச தரப்பின் நிலைப்பாட்டை அறியக்கூடியதாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

Leave a Reply