தமிழ் மக்களின் தேவை சுயாட்சியா, அபிவிருத்தியா?

” வடக்கு, கிழக்கு மக்கள் சுயாட்சி கோரவில்லை, மாறாக அவர்களுக்கு அபிவிருத்திகளும், தொழில் பாதுகாப்புமே தேவைப்படுகின்றன. எனவே, தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.” – என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல்  ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். 

தேசிய இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு, வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே, 25 ஆம் திகதி நடைபெறவிருந்தது. 

இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல்  ஜயநாத் கொலம்பகே , 

” ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெறவுள்ள பேச்சு, சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புகின்றேன். பேச்சுக்கு செல்லும்போது, நம்பகத்தன்மையும், வெளிப்படை தன்மையும் அவசியம். திறந்த மனதுடன் இருப்பதால்தான் ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார். எனவே, கூட்டமைப்பினரும் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். 

புலிகள் காலத்தில் முன்வைத்த அதே நான்கு விடயங்களை மீண்டும் முன்வைக்ககூடாது. அவ்வாறு செய்யவும்கூடாது. அதனால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.  

வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் சிந்தித்துதான் பேச்சுக்கு செல்ல வேண்டும். அம்மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்னவென்று ஆராய வேண்டும். எனக்கு தெரிந்த மட்டில், வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயாட்சி என்பது பிரச்சினை அல்ல, அவர்களுக்கு சிறந்த வீடொன்றை கட்டிக்கொள்ள வேண்டும், பிள்ளைகளை சிறப்பாக படிக்க வைக்க வேண்டும், தொழில் செய்து வருமானம் உழைக்க வேண்டும். தொழிலை முன்னெடுக்கும் சுதந்திரம் என்பவையே அவர்களுக்கு முக்கியம். ” – என்றார்.

அதேவேளை, அபிவிருத்திகளைவிடவும், கௌரவமானதொரு அரசியல் தீர்வை தமக்கு அவசியம் எனவும், அபிவிருத்திகளை மட்டும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் நல்லிணக்கம் மலராது எனவும் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply