13 ஐ எதிர்ப்பவர்களின் மாற்று தீர்வு என்ன?

அரசமைப்பின் 13ஆவது  திருத்தச்சட்டத்தை சவப்பெட்டிக்குள் வைத்துப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளை, வாக்களித்த மக்கள்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

” 13 ஆவது திருத்தச்சட்டத்தில்  தமிழ் மக்களுக்கு எஞ்சிய சிறு நன்மை பயக்கும் விடையங்களையும் சவப் பெட்டிக்குள் அடைத்து ஒரு தரப்பு போராட்டங்களை நடத்திவருகின்றது.இந்த தரப்பு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ அனுமதிக்க போவதில்லை , நடு வீதியில் நிறுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற 13 இற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாது வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்திற்கு மட்டக்களப்பு மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து  மக்களை பேருந்துகளில்  அழைத்து வந்து போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

13ஐ வேண்டாம் எனக் கூறுபவர்களால் 13க்கு மாற்றீடாக எதைக் கொண்டு வரப் போகிறோம் எவ்வாறு கொண்டு வரப் போகிறோம் எனக் கூற முடியாதவர்களாக உள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி மக்கள் முன் உரையாற்றிய நிலையில் அவரின் உரையை கேட்ட சிங்கள மக்கள் உரையாற்றிவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்  எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீதியில் நிக்கும் நிலையில் ஐனாதிபதியின் உரையில் நாட்டை மீட்பதற்கான  காத்திரமான திட்டங்கள்  இல்லை. 

நாட்டின் உயரிய பதவியில் இருப்பவரால் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்த முடியாவிட்டால் கதிரைக்கு பாரமாக இருப்பதை விட வீடு செல்வதே வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.

அதே போல  சிங்கள மக்கள் தாம் அரியணையில் அமர்த்தியவரை வீடு செல்லுமாறு கூறும் நிலையில் மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்லும் சவப்பெட்டி அரசியல்வாதிகளையும் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” – என்றார் சுரேஷ். 

Leave a Reply